ஈசனின் கோபம்... விஷ்ணுவின் அபயம்: அஷ்டமி, நவமி பெற்ற வரம்!
இங்கே எதுவுமே காரணமில்லாமல் நடப்பதில்லை. நாம் 'அசுபம்' என்று ஒதுக்கி வைக்கும் அஷ்டமிக்கும் நவமிக்கும் பின்னால் ஒரு சுவாரசியமான, ஆன்மீகப் பாடம் ஒளிந்திருக்கிறது.
கதையின் தொடக்கம் கயிலாயத்தில்...
சிவபெருமான் மகா மந்திரங்களை உபதேசித்துக் கொண்டிருந்த காலம். பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஈசன் சொல்லிக் கொடுக்கும் அந்தப் பொன்னான நேரத்தில், அஷ்டமியும் நவமியும் கவனக் குறைவாகத் தூங்கிவிட்டார்கள். ஞானத்தின் உச்சியான அந்த மகாதேவனுக்குக் கோபம் வராதா?
"மந்திர உபதேசத்தின் போது விழிப்புணர்வு இல்லாமல் போன உங்களை இந்த உலகமே புறக்கணிக்கட்டும்! உங்களை யாரும் சுப காரியங்களுக்குப் பயன்படுத்த மாட்டார்கள்" எனச் சாபமிட்டார் அந்த ருத்ரன்.
ஈசன் கொடுத்த சாபம்... உலகமே அவர்களைத் தீண்டத்தகாத நாட்களாகப் பார்க்கத் தொடங்கியது.
ஆனால், ஈசன் சாபம் கொடுத்தால் அதை மன்னிப்பாக மாற்றி அருள்வது அந்த மாயக்கண்ணன் தானே? தங்களை மன்னிக்கும்படி அந்த இரு திதிகளும் பெருமாளை நோக்கித் தவம் இருந்தன. அவர்களின் கண்ணீருக்கும், தவத்திற்கும் மனம் இரங்கினார் அந்தப் பரந்தாமன்.
"வருந்தாதீர்கள்... ஈசனின் கோபம் உங்களைச் சுத்தப்படுத்தியிருக்கிறது. உலகம் உங்களை ஒதுக்கி வைத்தாலும், நான் உங்களைக் கட்டியணைத்துக் கொள்கிறேன். தர்மத்தை நிலைநாட்ட நான் எடுக்கும் அவதாரங்களில் மிக உன்னதமான 'இராம அவதாரம்' நவமியிலும், என் லீலைகளால் உலகை ஆட்டிப்படைக்கும் 'கிருஷ்ண அவதாரம்' அஷ்டமியிலும் நிகழும். இனி உலகம் உங்களைக் கண்டு அஞ்சாது; உங்களைக் கொண்டாடும்!" என்று அபயம் அளித்தார்.
அன்று முதல், ஈசன் கொடுத்த 'தண்டனை' பெருமாளால் 'திருவிழாவாக' மாறியது.
புரிந்து கொள்ளுங்கள்... கவனக்குறைவால் நாம் செய்யும் தவறுகள் நம்மைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளலாம். ஆனால், உண்மையான வருத்தத்தோடு இறைவனைச் சரணடைந்தால், அந்தப் புறக்கணிப்பையே ஒரு பெரிய அங்கீகாரமாக மாற்றிக் கொடுப்பான் அந்த ஜகந்நாதன்!
ஜெய் ஸ்ரீராம்! அனைவருக்கும் இனிய இராம நவமி நல்வாழ்த்துகள்.
இவன்
ராஜா. க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக