அண்ணன்: ஒரு 'கந்தன்சாவடி' கணக்கியல்
!
ஆண்டு 2010.
இடம்: கந்தன்சாவடி.
அப்போது நான் ஒரு ஐடி கம்பெனி 'டெக்கி'. மாலை 5 மணி ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யாது. மூளைக்குக் கொஞ்சம் கஃபைன் (Caffeine) தேவைப்படும். டீ கடைக்குப் படையெடுப்போம். அங்கே ஒரு வடை மாஸ்டர் இருந்தார். அவர் போடும் மெதுவடைக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அரசியல் நிலவரம் அப்போது ஒரு விசித்திரமான கலவை. டெல்லியில் மன்மோகன் சிங், இங்கே கலைஞர். கூட்டணி பலமாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவியாக 'அம்மையார்' ஒரு பந்த் அறிவித்திருந்தார். பொதுவாக ஆளுங்கட்சி சப்போர்ட் இல்லையென்றால் பந்த் என்பது வெறும் காலண்டர் தேதியாகத்தான் இருக்கும். பெரிய பாதிப்பு இருக்காது.
அன்றும் அப்படித்தான் இருக்கும் என்று நம்பி ஆபீஸை விட்டு வெளியே வந்தோம்.
ஷாக்!
கடைத்தெருவே மயான அமைதி. ஒரு டீ கடை கூடத் திறக்கவில்லை. காஃபி இல்லாமல் கம்ப்யூட்டர் முன் உட்காருவது 'Syntax Error' ஆகுமே என்று நினைத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
மறுநாள் மாலை. அதே கடை. அதே வடை.
வடையைச் சாப்பிட்டுவிட்டு என் 'குதூகலமான' வாய் சும்மா இருக்கவில்லை. கடைக்காரரிடம் மெல்லக் கேட்டேன்.
"என்னண்ணே, நேத்து கடை லீவா? மெட்ராஸ் ஃபுல்லா நார்மலாத்தானே இருந்துச்சு.. இங்க மட்டும் ஏன் இப்படி ஒரு ஸ்ட்ரைக்?"
அவர் வடையைத் திருப்பிப் போட்டுக்கொண்டே சொன்னார், "நேத்து பந்த்-ஆச்சே தம்பி!"
"அதான் புரியுதுண்ணே.. ஆனா ஆளுங்கட்சி சப்போர்ட் இல்லாம இங்க மட்டும் எப்படி இவ்வளவு சக்சஸ்?"
அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். "தம்பி.. நம்ம ஏரியால கடையை அடைக்கச் சொல்லிட்டாங்க அண்ணன்."
எனக்கு 'க்யூரியாசிட்டி' (Curiosity) எகிறியது. "யாரு அந்த அண்ணன்?"
அவர் முகத்தில் ஒருவிதமான லோக்கல் விசுவாசம் மின்னியது. "நம்ம கந்தன் அண்ணன் சொல்லிட்டார் தம்பி. நமக்கு ஒரு கஷ்டம்னா அவர்கிட்டதான் போய் நிப்போம். அவர் சொன்னா அதை மீற முடியுமா?"
எனக்கு சட்டென்று ஒரு தமிழ் சினிமா ஹீரோவின் 'இமேஜ்' மனதில் வந்து போனது. அந்தத் டீ கடைக்காரர் சொன்ன 'கந்தன் அண்ணன்' தான் பின்னாளில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி. கந்தன்!
அரசியல் என்பது ஏசி அறைகளில் நடக்கும் கணக்கு அல்ல, இது போன்ற டீ கடைகளிலும், சாமானிய மனிதர்களின் நம்பிக்கைகளிலும் ஒளிந்து கிடக்கும் ஒரு 'அல்காரிதம்' (Algorithm) என்று அன்று புரிந்தது.
இவன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக