ஒரு பெண்ணின் கனவுக்கு வானம் எல்லையல்ல… அவள் பயணிக்கத் துணை நிற்கும் ஒருவர் இருந்தால் போதும்! ❤️🚀
AOT – ஆகாயத்தில் ஒரு தாரகை.
அட! டைட்டிலே ஒரு positive vibe-ஆ இருக்கே என்று MR தியேட்டருக்குப் போயாச்சு.
வழக்கமாக இந்தத் தியேட்டரில் கூட்டம் அதிகம் இருக்காது. 15 பேருக்கு மேல் வந்தால்தான் ஷோ தொடங்குவார்கள். ஆள் சேருமா, ஷோ போடுவார்களா என்ற பதற்றத்திலேயே நம்மை வைத்திருப்பார்கள் தியேட்டர் மேனேஜ்மென்ட்! 😄
ஏற்கனவே இதே துல்கர் நடித்த 'குருப்' படத்திற்காக இப்படிக் காத்திருந்த அனுபவம் உண்டு. ஆனால் இந்த முறை துல்கருக்கான ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸ் என 50 பேருக்கு மேல் வந்ததால் ஷோ கன்ஃபார்ம்!
சரி, படத்துக்கு வருவோம்.
குஜராத்தில் ஒரு Mining Factory-யில் Truck Driver-ஆக வேலை பார்க்கும் துல்கர். இந்திக்கூடத் தெரியாமல் சிரமப்படும் அவருக்கு, அங்கே அறிமுகமாகும் பிஜிலி என்ற பெண் இந்தி கற்றுக்கொடுக்கிறார். துல்கர் மீது காதல் கொள்ளும் பிஜிலியிடம், தான் ஏற்கெனவே திருமணமானவன் என்று அவர் சொல்ல, அங்கிருந்து தொடங்குகிறது ஒரு அழகான Flashback!
16 வயதுப் பெண். குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் குடும்பம். முதல் இரவில் அவளுடைய கனவு என்னவென்று கேட்கும் கணவன்!
இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என்று நையாண்டி செய்பவர்கள் செய்யட்டும்.
சினிமாவிலாவது நடக்கட்டுமே!
அந்த எண்ணத்தோடு படத்தைப் பார்த்தால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு அழகான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கிறது.
சிறுவயது முதலே Astronaut ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்ட நாயகி, அந்தக் கனவைத் தன் கணவரின் துணையோடு நனவாக்கப் பயணிப்பதுதான் கதை.
முதல் பாதியில் பெண் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மா, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பா, வரதட்சணை வாங்கித் திருமணம் செய்யும் துல்கரின் அக்கா என நம்மைச் சுற்றி இருக்கும் யதார்த்த மனிதர்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
மனைவியை ஒரு மாணவியாகப் பாவித்து, அவளுடைய படிப்புக்குத் துணை நிற்கும் கணவன். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நாயகிக்கு அங்கே ஏற்படும் பிரச்சினைகள். அவளுடைய பயணத்தில் ஏற்படும் முதல் தோல்வி.
இத்துடன் முதல் பாதி நிறைவடைகிறது.
தோல்வியடைந்த ஒரு பெண்ணை ஒதுக்காமல், தன்னுடைய அணியில் சேர்த்து அவள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் இன்னொரு பெண்ணாக இரண்டாம் பாதியில் அறிமுகமாகிறார் ஸ்ருதி ஹாசன்.
இருவரின் பயணம் வெற்றியை அடைந்ததா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது படக்குழு.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான் என்றாலும், தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் Score செய்து ஆட்ட நாயகனாக ஜெயிக்கிறார் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் வரும் துல்கர்!
கல்பனாவாக வரும் Satvika Veeravalli தனது பங்குக்கு மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். இரண்டாம் பாதியில் வந்தாலும் ரோகிணியாக ஸ்கோர் செய்கிறார் ஸ்ருதி ஹாசன்.
இந்த மாதிரியான படங்களை எடுக்கவும் ஒரு தைரியம் வேண்டும்!
நாலு காமெடி, நாலு ஃபைட், ஒரு பார்ட்டி சாங் என வழக்கமான Commercial Formula எதுவும் இல்லாமல், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆடியன்ஸை உட்கார வைப்பது சாதாரண விஷயமல்ல.
அதை முடிந்தவரை சுவாரசியமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் Pavan Sadineni.
ஒரு பெண்ணின் கனவைத் திருமணம் தடுத்து நிறுத்த வேண்டியதில்லை; சரியான துணை கிடைத்தால் அதுவே அவளுடைய பயணத்தின் தொடக்கமாகவும் மாறலாம்!
நல்ல முயற்சி. படக்குழுவினருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துகள்! ❤️
– இவன்
ராஜா க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக