ஒரு காலத்தில் கூட்டம் நிரம்பியிருந்த ஆந்திரா மெஸ்!
தீபாவளி shopping என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது தி.நகர். தேவையான துணிமணிகளை வாங்கிவிட்டு, இரவு உணவுக்கு நம்ம கனக துர்கா ஆந்திரா மெஸ்ஸுக்குச் செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன்.
புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் தி.நகர் பாலத்தை ஒட்டிய தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.
வயிற்றுக்கு உணவு கொடுப்பதற்கு முன்பாக, கொஞ்சம் மூளைக்கும் நினைவுகளுக்கும் உணவு கொடுக்கலாமே!
ஒரு தெருவை நோக்கித் திரும்பியபோது, கண்ணில் பட்டது அந்த ஆந்திரா மெஸ் பெயர்ப்பலகை.
கம்பன் சீதையைக் கண்ட ராமனைப் பற்றிச் சொன்னது போல, எனக்குள் பழைய நினைவுகள் சட்டென்று உயிர்பெற்றன!
இதே மெஸ்ஸுக்கு மதிய உணவுக்காக எத்தனை முறை வந்திருப்பேன்!
அந்தக் காலத்தில் இங்கே சாப்பிடுவது என்பது ஒரு தனி அனுபவம். குறிப்பாக, மூன்று அல்லது நான்கு முறை சாதம் வாங்கிச் சாப்பிடுவதை ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப் போலப் பெருமையாக நினைத்துக்கொள்வோம். இப்போது அதை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தேன்.
அதே இரண்டாவது மாடி. அதே மெஸ்.
கையில் shopping bags வேறு. அவற்றை எங்கே வைப்பது, யார் பார்த்துக்கொள்வார்கள் என்று மனதிற்குள் ஒரு சிறிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டமே நடந்தது. இரண்டு கைகளிலும் பைகளை வைத்துக்கொண்டு இரண்டு மாடிகள் ஏறும்போது கொஞ்சம் மூச்சு வாங்கியது.
பரவாயில்லை!
இன்று வழக்கம்போல நம்முடைய உணவு வேட்டை தொடர வேண்டும். முடிந்தவரை நிறையச் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் ஒரு சபதம் போட்டுக்கொண்டு மெஸ்ஸுக்குள் நுழைந்தேன்.
ஆனால், அங்கே எனக்காகக் காத்திருந்தது ஓர் அதிர்ச்சி!
ஒரு காலத்தில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்க வேண்டிய அதே மெஸ்ஸில் இப்போது யாருமே இல்லை.
நேரம் இரவு 7.45.
நான் மட்டுமே!
ஒரு நிமிடம் சுற்றிலும் பார்த்தேன். நம்பவே முடியவில்லை.
என்ன நினைத்து வந்தேன், இங்கே என்ன நடக்கிறது?
வழக்கமாகக் கல்லா பெட்டியில் ஒருவர் அமர்ந்திருப்பார். இப்போது அவரையும் காணவில்லை. உள்ளே இருந்த ஒருவரிடம்,
"சார், டோக்கன் வாங்கணும்" என்றேன்.
"வாங்க சார், வந்து உட்காருங்க" என்றார்.
இன்னொரு ஆச்சரியம். அவரே எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவரே உரிமையாளர், அவரே கல்லா, அவரே சப்ளையர் என்று எல்லாப் பொறுப்புகளையும் ஒருவரே பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னுடைய shopping bags-ஐ எந்தப் பயமும் இல்லாமல் வைத்துவிட்டு கை கழுவச் சென்றேன்.
நான் திரும்பி வருவதற்குள் அவரே என் மேசையில் வாழை இலையை விரித்திருந்தார்.
அந்த மெஸ்ஸின் அடையாளமான பப்பு, முருங்கைக்காய் கூட்டு, என்னுடைய favourite வெண்டைக்காய் fry என்று ஒவ்வொன்றாகப் பரிமாறினார்.
சாப்பிடத் தொடங்கியதும் அவரிடம் கேட்டேன்.
"என்ன சார், இப்படி கூட்டமே இல்லாமல் இருக்கு?"
அவர் என்னைப் பார்த்து,
"நீங்க old customer-ஆ சார்?" என்றார்.
அந்தக் கேள்வி எனக்குள் ஒரு சின்ன சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
அந்த மெஸ்ஸுக்கு முன்பு எத்தனை முறை வந்திருக்கிறேன், அங்கிருந்த பழக்கவழக்கங்கள் என்னென்ன, அப்போது எப்படி கூட்டம் இருக்கும் என்று இரண்டு நிமிடங்கள் அவரிடம் விவரித்தேன்.
அவர் முகத்தில் ஒரு பக்கம் பெருமையும், இன்னொரு பக்கம் இன்றைய நிலை குறித்த வருத்தமும் இருந்திருக்கலாம்.
14 வருடங்களுக்கு மேலாக ஒரு உணவகத்தைத் தொடர்ந்து நடத்துவது சாதாரண விஷயமா என்ன? அதுவும் தி.நகர் போன்ற வணிகப் பகுதியில்!
ஒரு உணவகம் என்பது வெறும் உணவு பரிமாறும் இடம் மட்டுமல்ல. அதைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பின்னால் எத்தனையோ மனிதர்களின் உழைப்பும், நம்பிக்கையும் இருக்கும்.
பேசிக்கொண்டிருந்தபோது அவரே சொன்னார்.
"முன்ன மாதிரி தி.நகருக்குக் கூட்டம் வர்றதில்லை சார்."
அதைக் கேட்டுக்கொண்டேன்.
பிறகு மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினேன்.
ஒரு காலத்தில் இரண்டாவது, மூன்றாவது முறையாகச் சாதம் வாங்கிச் சாப்பிட்ட அதே நான், இன்று ஒரே முறை கொடுத்த சாதத்தை வைத்துக்கொண்டு சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
சாப்பாட்டின் சுவையிலும் முன்பு இருந்த அதே தன்மை இல்லை என்று தோன்றியது.
கூட்டம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு சிறிய analysis ஓடியது.
ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தேன்.
அந்த ஒரே மனிதரிடமே GPay செய்து பணத்தையும் செலுத்திவிட்டு வெளியே வந்தேன். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு யாரும் அந்த மெஸ்ஸுக்குள் வரவில்லை.
ஏதோ ஒரு சிறிய வருத்தம் மனதிற்குள் இருந்தது.
அங்கிருந்து மாம்பலம் ரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
அப்போதுதான் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது!
அதே தெருவின் இருபுறங்களிலும் இருந்த தள்ளுவண்டிக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆண்கள், பெண்கள் எனப் பலரும் நின்றுகொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சில கடைகளில் இடம் கிடைப்பதே சிரமமாக இருந்தது.
ஒரு காலத்தில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றால் இப்படிப்பட்ட உணவகங்களைத்தானே தேடிச் செல்வோம்?
இன்று அந்த உணவகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தள்ளுவண்டிக் கடைகளில் மட்டும் கூட்டம் அலைமோதுகிறது.
இது வெறும் உணவுப் பழக்கத்தின் மாற்றமா? அல்லது உணவகங்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலும் ஒரு தலைமுறை மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
விலை, சுவை, வேகம், வசதி என்று பல காரணங்கள் இருக்கலாம்.
இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்கான உணவு அனுபவம் இருக்கிறது. நம்முடைய தலைமுறைக்கு நம்முடைய நினைவுகளோடு கலந்த உணவகங்கள் இருக்கின்றன.
அதற்காகத் தள்ளுவண்டிக் கடைகளின் உணவைக் குறைத்து மதிப்பிட முடியாது. அங்கும் தனித்துவமான சுவையும் உழைப்பும் இருக்கின்றன.
ஆனால், என்னைப் போன்றவர்கள் ஒரு காலத்தில் விரும்பிச் சென்ற உணவகங்கள் இப்படி மாறுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
குறிப்பாக, இரவு நேரத்தில் மெஸ்ஸுக்குச் சென்று சாதம் சாப்பிட வேண்டும் என்ற என்னுடைய ஆசைக்கு இப்போது ரசிகர்கள் குறைந்துவிட்டார்களோ என்னவோ!
இந்த எண்ணங்களோடு அந்தத் தெருவின் இருபுறங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தேன்.
மாம்பலம் ரயில் நிலையம் என்னை அழைத்துக்கொண்டிருந்தது.
அன்றைய தீபாவளி shopping முடிந்தது. இரவு உணவும் முடிந்தது.
ஆனால், மனதில் மட்டும் அந்தப் பழைய ஆந்திரா மெஸ்ஸின் நினைவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
சில இடங்கள் நமக்கு உணவை மட்டும் கொடுப்பதில்லை. நம்முடைய வாழ்க்கையின் சில காலகட்டங்களையும் சேமித்து வைத்திருக்கின்றன.
பல வருடங்கள் கழித்து அந்த இடத்துக்குச் செல்லும்போது, நாம் தேடுவது பழைய சுவையை மட்டுமல்ல; அந்த இடத்தோடு வாழ்ந்த நம்முடைய பழைய நாட்களையும்தான்.
காலம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகிறார்கள். உணவுப் பழக்கங்களும் மாறுகின்றன. ஆனால் சில இடங்கள் மட்டும் நம்முடைய நினைவுகளில் பழைய சுவையோடு அப்படியே இருக்கின்றன.
இவன்,
ராஜா. க
#Chennai, T Nagar, #FoodMemories, #AndhraMess, #PersonalExperience
#Raja

