சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...
கன்னியாகுமாரி எனக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்.
சில இடங்கள் சிலருக்குப் பிடிக்கும்.
சில இடங்களுக்கு சிலரைப் பிடித்துவிடும்.
நான் இரண்டாவது வகை.
திருச்செந்தூரில் பிறந்து அங்கே வளர்ந்த எனக்கு, இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமாரி ஒரு சுற்றுலாத் தலம் மட்டும் அல்ல. அது என் வாழ்க்கையின் பல பருவங்களை அமைதியாகச் சேமித்து வைத்திருக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம்.
சிறு வயது முதலே எங்கு சுற்றுலா என்றாலும், பள்ளி சுற்றுலாவாக இருந்தாலும், குடும்பச் சுற்றுலாவாக இருந்தாலும், இறுதியில் வந்து சேரும் இடம் கன்னியாகுமாரிதான்.
சிலருக்குச் சில்லென்ற மலைகள் பிடிக்கும்.
எனக்கோ வெயில் பிடிக்கும்.
வெயிலோடு விளையாடி, வெயிலோடு வளர்ந்தவன் நான். அதனாலோ என்னவோ, கடலின் உப்புக் காற்றும், சூரியனின் வெப்பமும் எனக்கு எப்போதும் நெருக்கமானவை.
"இமயம் முதல் குமரி வரை" என்று புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
ஆனால், அந்த "குமரி" என் வாழ்க்கையில் ஒரு பாடப்புத்தக வரியாக இல்லாமல், நினைவுகளால் நிரம்பிய இடமாக மாறிவிட்டது.
சிறு வயதில் என் பள்ளி ஆசிரியர் என் கையைப் பிடித்து இந்த மண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
வாலிப வயதில் நண்பர்களும் நண்பிகளும் கைகோர்த்து வந்தோம்.
காலம் இன்னும் கொஞ்சம் நகர்ந்தது.
எங்கள் வீட்டின் அடுத்த தலைமுறையின் சிறிய கைகளைப் பிடித்து, "இது தான் கன்னியாகுமாரி..." என்று பெருமையோடு காட்டினேன்.
இந்த முறை மட்டும் அந்தப் பயணம் வேறுபட்டிருந்தது.
என் பெற்றோரின் கைகளைப் பிடித்து அவர்களை அழைத்து வந்தேன்.
விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு ஒவ்வொரு அலையிலும் உயர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.
அப்பா அருகிலிருந்த கைப்பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்தார்.
அந்த ஒரு நொடியில்...
சிறு வயதில் அவர் என் கையைப் பிடித்து நடத்திய நாட்கள் எல்லாம் கண்முன்னே ஓடின.
அந்த அலைகளை விட என் நினைவுகள்தான் அதிகமாக அசைந்தன.
அன்றுதான் புரிந்தது...
சிறு வயதில் நம்மை யாரோ கைபிடித்து உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள்.
ஒரு நாள், அதே கைகளை நாம் பிடித்து நடத்த வேண்டிய காலமும் வரும்.
வயோதிகம் எல்லோருக்கும் வரும்.
ஆனால் அது நம் பெற்றோரிடம் வரும்போது மட்டும், அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
அந்த உண்மையை எனக்குக் கற்றுக் கொடுத்த மண் கன்னியாகுமாரி.
அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்...
சில இடங்கள் நமக்குப் பிடிக்கும்.
சில இடங்களுக்கு நம்மைப் பிடித்துவிடும்.
கன்னியாகுமாரி என்னை அப்படித்தான் பிடித்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் போது, கன்னியாகுமாரி பகவதி அம்மன் மீண்டும் அழைத்திருக்கிறார் என்ற உணர்வு வரும்.
காலை சூரியன் கடலில் இருந்து மெதுவாக எழும் காட்சியைப் பார்ப்பது...
அலைகளோடு குழந்தைகளைப் போல விளையாடுவது...
படகில் ஏறி விவேகானந்தர் பாறையை அடைவது...
மூன்று கடல்கள் சங்கமிக்கும் அந்த எல்லையற்ற நீலத்தை அமைதியாக நின்று ரசிப்பது...
தியானம் என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே, அமைதிக்கும் ஒரு மொழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்த இடம் அது.
இன்று வானைத் தொடும் திருவள்ளுவர் சிலையும், கண்ணாடிப் பாலமும் அந்த அழகுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்திருக்கின்றன.
கன்னியாகுமாரியில் ஒரு பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.
அங்குள்ள கடைகளில் ஒரு கவ்பாய் தொப்பி வாங்குவது.
பிறகு, மொபைலில் எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அங்குள்ள புகைப்படக் கலைஞரை அழைத்து குடும்பத்தோடு ஒரு புகைப்படம் எடுப்பது.
ஏனென்றால், அந்த ஒரு புகைப்படத்தில் நம் நினைவுகள் மட்டுமல்ல...
அவருடைய வாழ்வாதாரமும் இருக்கிறது.
இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம்.
இந்த முறை எங்கள் குடும்பப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் "சிரிங்க..." என்றார்.
நாங்களும் சிரித்தோம்.
அந்தப் புகைப்படத்தில் சிரித்தது முகங்கள் மட்டும் இல்லை.
பல வருட நினைவுகளும்.
ஒவ்வொரு முறை கன்னியாகுமாரியை விட்டு திரும்பும் போதும், "மீண்டும் வா..." என்று யாரோ மெதுவாக அழைப்பது போல இருக்கும்.
அது கடலா...
காற்றா...
பகவதி அம்மனின் அருளா...
இல்லை என் சிறுவயது நினைவுகளா...
எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.
சில இடங்கள் நம்மை மறப்பதில்லை.
கன்னியாகுமாரி... என்னை இன்னும் மறக்கவில்லை.
– ராஜா.க ✍🏻✍🏻
திருச்செந்தூரில் பிறந்தவன். நினைவுகளைத் தேடி பயணிப்பவன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக