தங்கமும் நண்பனும் – ஒரு தங்கம் வாங்கிய அனுபவம்
சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் தன் மனைவிக்கு மோதிரம் வாங்க GRT ஜுவல்லரிக்கு அழைத்து சென்றான். "எனக்கு பேரம் பேச தெரியாது, நீ எவ்வளவு குறைத்து வாங்கி தந்தாலும் மகிழ்ச்சி தான்," என்றான். "சரி, பார்த்துக் கொள்ளலாம், வா," என்று உள்ளே சென்றோம்.
அவன் அரை பவுன் (6 கிராம்) மோதிரம் தேர்வு செய்தான்.
"ஏன் டா, ஒரு பவுனுக்கு வாங்க வேண்டாமா? உன் மாமனார் நில சொந்தக்காரர், இல்லையா?" என்றேன்.
அவன் மனைவிக்கு ஒருவித பெருமிதம்!
"விடுங்க அண்ணா, அவர் வாங்கித் தருவதே பெரிய விஷயம்," என்றாள்.
"6 கிராம் வாங்கிக்கோ, சுக்கிரன் நம்பர்," என்றேன்.
"உன்னையே கூட்டிட்டு வந்ததுக்கே…" என்று சிரித்தான்.
"உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நன்றாகச் செய்," என்றான்.
தங்கம் வாங்கும் சமயம் – பேரம் தொடக்கம்
மோதிரத்தை தேர்வு செய்துவிட்டு பில் கட்டவந்தோம். அன்றைய தங்க விலை, சேதாரம் 14%, அதற்கு மேல் வரி எல்லாம் சேர்த்து பெரிய தொகை ஆனது.
நண்பன் ஷாக்!
"என்னடா, இவ்ளோ வருது?" என்றான்.
"பேசலாம், வாடா," என்று சூப்பர்வைசரை சென்றோம்.
சூப்பர்வைசர் 1% குறைத்து, 13% என்றார்.
"இது எப்படி, சார்? இப்போ எவ்வளவு குறைந்தது? பெரிய வித்தியாசமில்லையே?" என்று கேட்டேன்.
"நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.
"6% - 7%," என்றேன்.
அவர் சிரித்தார். "அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.
"ஏன், சார்?"
"15% சேதாரத்திற்கு எங்கள் ரூபாய் மதிப்பு இன்றைய தங்கத்தில் 3/4 கிராம் (முக்கால் கிராம்) தான் வருகிறது. நீங்கள் எடுத்த 6 கிராம் தங்கத்திற்கும் அதே சேதாரம் என்றால் எப்படி சார் முடியும்?" என்றார்.
தவணை முறையில் வாங்குவது ஏன்?
"சார், இதற்கெல்லாம் டிசைன் காரணம்," என்றார்.
"இதில் என்ன டிசைன் இருக்கு, சாதாரண வளையம் தான்! அதற்கு 7% தான் தரவேண்டும்," என்றேன்.
அவர்: "சார், கொஞ்சம் நியாயமா பேசுங்க!"
நான்: "நீங்கள் இப்படித்தான் பேசினால், தங்கம் வாங்கிய பயத்திலேயே இவன் மீண்டும் வாங்க மாட்டான்!"
"நீங்கள் திருநெல்வேலி தான், இல்லையா? நம்ம MH ஜுவல்லரி எவ்வளவு குறைக்கிறார்கள் என்று தெரியாதா?" என்றேன்.
"சார், எங்களால் அவ்வளவு குறைக்க முடியாது," என்றார்.
"நீங்கள் பிரம்மா நினைத்தால், ஆயுசுக்கு பஞ்சம்," என்றேன்.
அவர் சிரித்துவிட்டார்.
கடைசியில், "முதல் முறை என்பதால்," 9% சேதாரத்தில் ஒப்புக்கொண்டார்.
வெளியே வந்தவுடன்…
நண்பன்: "நீ பேரம் பேசுவதைக் கண்டு பயந்துவிட்டேன். எங்கே நம்மை திட்டி விடுவாரோ!"
நான்: "ஏன் டா? நம் தங்கம் நம் உரிமை!" – பிரபு (சினிமா டயலாக்கில்)
ஆனால், இப்போது GRT இல் சேதாரத்தை குறைக்க மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். தங்கம் வாங்க ஒரு ரெகுலர் கடையை பிடித்துக்கொள்ள வேண்டும் – அவ்வளவு தான்!
- ராஜா.க