ஞாயிறு, 22 மே, 2022

பேருந்து பயணமும் திடீர் பற்றும்....

 




வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.


பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,


திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.


 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.


யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.


ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக