வியாழன், 28 ஏப்ரல், 2022

நண்பர்களும் புரிதலும் !!

 நண்பர்களும்  புரிதலும்  !!! 


இன்று நண்பர்கள் க்கு இடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு இந்த

 " புரிதல் " இல்லாததது தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.


அப்படி ஒரு அழகான மற்றும் அழத்தமான நினைவுகள் என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் இந்த புரிதலுக்கு உண்டான சிறு சான்றுகள்..


செல்வ ராஜ் ,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை. 

யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம். 


சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE பிரிவு மாணவர்கள் 7, நாங்கள் CSE மொத்தம் 10 நபர்கள் தங்கும் பெரிய வீடு.


கூட்டினுள் (விடுதியில்) கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.


நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி   மகிழ்ந்த காலம். 


ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,  செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் உங்களுக்கு புரியாது என முகத்தை சுறுக்க,


நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது,  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் பேசியது ஒரு புறம். 


நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல். 

ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் ஒரே சேர வெளி கொணர்ந்த தருணம் அது.


இரண்டாவது நிகழ்வு.


8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால் 

A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம். 

A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார். 


நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை. 

மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம். எங்களை பார்த்து எங்கள் B பிரிவு மாணவிகள் வெளியேறியது செம மாஸா இருந்தது.


இந்த மாதிரி யான  புரிதல் நண்பர்களுக்குள்   இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.


புரிதலுடன் 

ராஜா . க

சனி, 2 ஏப்ரல், 2022

ஸ்ரீ பாலாஜி பவன் சைதாப்பேட்டை !!!

 



ஒரு வேலையாக #சைதாப்பேட்டை செல்ல  வேண்டி இருந்தது, வேலை முடிந்த பின் பழைய நினைவுகளுடன்

சைதாப்பேட்டை பாலத்தை கடந்து செல்கையில் சைதை யின் ஒரு அடையாளமான கலைஞர் ஆர்ச் (வளைவு) தாண்டி உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் அன்போடு அழைத்தது.


ஒரு காலத்துல என்னோட favourite ஹோட்டல் இங்கே மதியம்  lunch ரொம்ப சூப்பரா இருக்கும் குறிப்பாக சாம்பார், டிபன் வகையறாக்கள் கூட நல்லா தான் இருக்கும், சரி வந்ததும் வந்துட்டோம், மாலை பொழுதில்  லைட்டா ஒரு டிபன் சாப்பிடுவோம் என முடிவு செய்து, உள்ளே சென்றேன், ஒரு போர்டில் evening Combo என்று ஒரு மெனு.


ஒரு தோசை(மினி), கிச்சடி, சாம்பார் வடை, மினி காபி. அடடே நம்மை போல ஒருவன் தான் இது போன்ற மெனுவை  தயார் செய்து  இருப்பான் என்ற மகிழ்ச்சியில் சரி இன்று அதேயே ஆர்டர் கொடுத்தேன், எனக்கு தெரிந்து 12 வருடமாக அதே இடத்தில் இயங்குகின்ற கடை,


அதற்கு போட்டியாக அருகிலேயே ஹோட்டல் உடுப்பி ,

காரைக்குடி உணவகம் 

எல்லாம் வந்தது கால போக்கில் காணாமல் போனது. ஹோட்டல் தொழில் செய்வதில் எவ்வளவு கஷ்டம் என நினைத்து கொண்டு இருக்கையில் ஆர்டர் செய்த மெனு வந்தது. 


தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார் சகிதம்

முதலில் கிச்சடி யை நோக்கியே கண்கள் சென்றது. சாம்பாரை கிச்சடியில் படர செய்து சூடான சாம்பார் மற்றும் சற்று குழைந்த கிச்சடியுடன் சுவைக்கையில் அடடே பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகம் போல சாம்பரால் கிச்சடி சுவையானதா ? கிச்சடியால் சாம்பார் சுவை யானதா ? என்று சந்தேகம்.


சந்தேகம் தீர்க்க புலவர் தருமியை யா அழைக்க முடியும் ? இந்த முறை சட்னி உதவியுடன் உட்கொள்கையில் அந்த அளவுக்கு சுவையில்லை  கண்டேன் சீதையை என்ற கம்பன் வரிகளை போல கண்டேன் விடையை என்று பெருமிதத்துடன், சாம்பார் தான் சுவைக்கு காரணம் என்று ,ஆதலால் சாம்பார் வடை உதவியுடன் கிச்சடி உண்ணும் போது அதன் சுவை இரட்டிப்பு ஆனது.


மூன்றாவது முறையாக சாம்பார் வடை, கார சட்னி சகிதம் கிச்சடி சேர்த்து உண்ட பொழுது அட இந்த காம்போ நல்லா தான் இருக்கு என்று நினைத்து கிச்சடி யை தேடினால் அதன் தடமே இல்லை, அடேய் இது மினி கிச்சடி டா என்றது பிளேட். சரி சாம்பார் வடையை வதம் செய்து, மினி தோசை க்கு சென்று சட்னியுடன் ,சாம்பார்


சேர்த்து குழைத்து அடித்து தோசை யை முடிப்பதற்கு முன்பே காபியை கேட்டு விட்டேன், காபி வரம் நேரமும்  கார சட்னி தோசை காம்போ முடியவும் பழைய தமிழ் படங்களில் க்ளைமாக்ஸ் வரும் போலீஸ் போல சரியாக இருந்தது, நாக்கில் காரத்தின் சுவை ஒட்டி இருக்கையில் காபி யை ருசிக்கும் தருணம் காரமும் , அந்த காபி யின் இனிப்பும் ஒரு சேர்கையில் it's Bliss (இட்ஸ் பிளிஸ்).


திருப்தியான ஒரு evening டிபன் சாப்பிட்ட உணர்வு , பில் வந்தது குறைந்தது 90₹ முதல் 100₹ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம் நம் கணிப்பு பெரும்பாலும் தவறாக தான் முடியும் போல.  60₹ என்று இருந்தது 100 நாட்கள் கடந்தும் பெட்ரோல் விலை மாறாமல் இருந்ததை போன்ற அதிர்ச்சி.

இது போன்ற (Combo) காம்போ க்களை மற்ற ஹோட்டல்களும் முயற்சி செய்யலாம்.


பில்லை கட்டி விட்டு கல்லாவில் இருந்தவரிடத்தில் நல்லா இருந்தது, மூன்று வருடங்கள் முன்பு இங்கு வந்ததா நினைவு இன்றும் உங்கள் கடையின் சாம்பார் சுவை குறையவில்லை என்று கூறி விடை பெற்றேன். அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நன்றி என்று கூறினார். 


இப்போது ள்ள பெரும்பாலான ஹோட்டல் கள் திறந்த வுடன் மூடு விழா காண்கிறது. காரணம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், 

மேலும் முறையான master இல்லாமல் அவர்களே மாஸ்டர் வேடம் போட்டு கொள்வது. இதை பற்றி கேட்ட போது நமக்கு நல்லா சமைக்க தெரியும் மைண்ட் வாய்ஸ் அதை நாங்க சொல்லணும்.


 ஆண்பாவம் படத்தில் ஒரு காட்சி வரும், அதில் விகே. ராமசாமியை பார்த்து தென்னை மட்டை விற்றவன் லாம் தியேட்டர் கட்டினா இப்படி தான் நடக்கும் என்பார். அது போல எல்லாராலும் ஹோட்டல் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது கடினமே !!


ஸ்ரீ பாலாஜி பவன் வெற்றி அங்கு பணி புரியும் அனைவருக்குமான வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉


இவன்

ராஜா.க