வியாழன், 12 டிசம்பர், 2019

கதாநாயகன்

கதாநாயகன்

90's களில் எங்கள் திருச்செந்தூரில் நிறைய கல்யாண மண்டபங்கள் கிடையாது, ஆதலால் அருகில் உள்ள திருநெல்வேலி யில் கல்யாண மண்டபங்கள் அதிகம் இருந்ததால் அங்கே சிறப்பாக கல்யாணம் நடத்துவார்கள்.

மிகவும் வேண்டிய ஒருவரின்   கல்யாணத்திற்காக திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. வெளியூர் பயணம் என்றாலே மிகவும் பிடிக்கும் பள்ளி பருவத்தில். அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கல்யாணம் முடிந்தவுடன் மதியம் மேட்னி ஷோ க்கு ஏதாவது சினிமாவிற்கு கூட்டி செல்வார்கள்.

அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை, மற்றும் மணிரத்னதின் ரோஜா வெளி வந்த நேரம்.ஒரு கோஷ்டி ரோஜாவிற்கு சென்றது,  நாங்கள் அண்ணாமலையாரை தரிசிக்க நினைத்தோம்.

நெல்லை பூர்ணகலா அக்காலகட்டத்தில் மிக பிரபலமான திரையரங்கம். அங்கு அண்ணாமலை வெற்றி கரமாக ஓடி கொண்டிருந்தது.

நான், அப்பா,அப்பாவின் நண்பர்கள் இருவர் சகிதம் தியேட்டருக்கு சென்றாயிற்று, கடுமையான கூட்டம்.இத்தனை க்கும் படம் வெளிவந்து 75 நாளாவது ஆயிருக்கும்.

"என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ" என்று சிறிய வருத்தத்தோடு  முகம் சுருங்கி போனது.  அப்பா, என்னிடம் படம் பார்க்கணுமா ? என்றார் இவ்வளவு கூட்டத்தில் எப்படி டிக்கெட் கிடைக்கும் வேண்டாம் என்றேன் பவ்யமாக. டேய் நடிக்காத என்கிட்டேயேவா  என்றார் (கண்டுபிடிச்சுட்டாரே மைண்ட் வாய்ஸ்). 

பிறகு தன் நண்பரை அழைத்து தியேட்டரில் உள்ள ஒருவரை பார்த்து விட்டு வரும் படி கூறினார்.அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அப்பாவை கண்டதும் மிக மகிழ்ச்சியுடன் உரையாடி ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார் காபி,காரம் சகிதம் ஒரு சிறிய உபசரிப்பு. என் மனதிற்குள் ஓடுவது டிக்கெட் கிடைக்குமா / கிடைக்காதா ? என்றே அலை பாய்ந்தது.

உரையாடல் முடிந்த வுடன் சரி அவ்வளவு தான் என நினைத்தேன்.

 நேராக அழைத்து சென்று சோபா சீட்டில் (First class Ticket) அமர வைத்தனர். அப்பா டிக்கெட் எங்கே என்றேன் ? உட்கார்த்து படம் பாரு டே என்றார்.

திரையில் ரஜினி ஹீரோ வாக தெரிந்தார்,
அருகில் அப்பா  ஹீரோ வாக அமர்ந்திருந்தார்.

இவன்
ராஜா.க